அப்போது எனக்கு 13 வயது. அன்று நாட்டிய வகுப்பு. அந்த வயதில் படிப்பும் நடன வகுப்பும் மட்டுமே எனது உலகமாக இருந்தது. சிந்தனை செயல் அனைத்தும் பரதத்தையொட்டியே இருந்த காலம் அது. வழக்கம் போல அன்று நடன வகுப்பு இறை மற்றும் குரு வணக்கத்துடன் ஆரம்பித்தது. சுமார் 30 மாணவர்களுக்கு மேல் அடங்கிய வகுப்பில் அன்றைக்கு என் குருவின் கவனம் என் மேல் இருந்தது. சட்டென்று, எல்லா மாணவர்களையும் கடந்த வாரம் கற்ற நடனத்தை மீள்பார்வை செய்யும் படி கோயில் மண்டபத்தின் வலது புறம் போகச்சொன்னார். குருவின் முன் நான் மட்டும் நின்றேன். என் நாட்டிய குருவின் மீது எனக்கு நிறைய குருபக்தி உண்டு. அவர் மிகவும் கண்டிப்பான குரு. கண்டிப்பால் மட்டுமே ஓர் ஒழுக்கமான மற்றும் சிறப்பான நர்த்தகியை உருவாக்க முடியும் என்பது அவருடைய கருத்து. ஆகவே, எல்லா மாணவர்களிடமும் கண்டிப்பாகத்தான் இருப்பார். என்னிடமும் அப்படித்தான். அவரிடம் நான் பேசிய வார்த்தைகளைக் கணக்கிட முடியும். கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் கூறுவேன். இன்றுவரைக்கும் அப்படித்தான். அவர் முன் ஒருத்தியாக நிற்பதற்கு பயமாகவும் மனதில் நிறைய கேள்விகளும் எழும்பின.
குரு, “நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, சின்னப்பிள்ளைகள் மாதிரி ஆடமெ, கொஞ்சம் நாட்டியத்தை உணர்ந்து ஆடு. நான் உனக்கு ஒரு பதம் சொல்லித்தரேன்”. என்றார். மனதில் “அய்யோ…பதமா?” எனப் பதறினேன். உடனே, எனது கண்கள் அம்மாவைத் தேடியன. ஒவ்வொரு நடனவகுப்பிற்கும் என் அம்மா என்னுடன் வருவார். என் நாட்டிய வளர்ச்சியில் என் அம்மாவின் பங்கு நிறைய உள்ளது. நான் சிறந்த பரதநாட்டிய தாரகையாக வர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். குரு கூறியதைக் கேட்டதும், என் கண்கள் அம்மாவை நோக்கி அகலமாக விரிந்தன.
பரதநாட்டியத்தில் நாட்டிய உருப்படிகள் (நாட்டிய வகைகள்) பத்து முக்கிய பிரிவுகளில் பதமும் ஒன்று. கடவுள் மீதான பாடல்களே பதங்கள் எனப்படும். இலக்கியம், இதிகாசம், புராண நிகழ்ச்சிகள், சமூகப் பாடல்கள் எல்லாம் பதங்களாகக் கருதப்படும். பதங்கள் நடனமணிகள் செய்கின்ற அழகிய முகபாவங்களை அதாவது நவரசங்களைப் பொறுத்தே சிறப்பு பெறுகிறது. “அலைபாயுதே கண்ணா”, பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே”, “ஆசை முகம் மறந்து போச்சே”, என புகழ்பெற்ற பதம் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு நர்த்தகி பதம் ஆடப்படும் பொழுது, அந்தப் பதம் குறிக்கும் நாயகன் அல்லது நாயகி அல்லது சகியின் கதாபாத்திரத்தை, வயது, சமூகத்தில் நிலை போன்ற பல கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முறையாக அபிநயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு பதத்திற்குப் பின்னால் ஒரு சிறிய நாடகமே அடங்கியிக்கும். பதத்தை ஆடும் போது, ஒரு நர்த்தகி அப்பாடலின் உட்கருத்தையும் ஊகிக்கக்கூடிய கருத்துக்களையும், விரிவாக அபிநயிக்க வேண்டும். உதாரணத்திற்கு “அலைபாயுதே கண்ணா” எனும் பாடலுக்கு ஆடுகையில் ஒரு நர்த்தகி இராதை அல்லது கண்ணனை நேசிக்கும் பெண்ணாக மாற வேண்டியிருக்கிறது. பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா” எனும் பாடலுக்கு ஆடும்போது, பராசக்தியை குழந்தையாக எண்ணி ஆட வேண்டியிருக்கிறது. பாடலில் வரும் பின்னனிக்கதை அல்லது கதாமாந்தர்களின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு அதில் லாயித்து முகபாவத்துடன் ஆடினால் மட்டுமே பதம் பார்வையாரகளிடம் சென்றடையும்.
ஒரு நர்த்தகி நாட்டியத்தின் மீது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அவளால் ஒரு தரமான பதத்தைச் சமர்ப்பிக்க முடியும். ஆகையால்தான், சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு, 50ஆம் – 60ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்பட நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நடனம் மற்றும் நாடகக் கலை மிகவும் அவசியமாக இருந்தது. பரதம் தெரிந்தவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியும் எனக் கட்டாயமும் இருந்தது. பதம் பல நடன உருப்படிகளில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.
இத்தகைய சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதம் பாடலுக்கு 13 வயதில் அபிநயம் பிடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. “அலைபாயுதே கண்ணா….” எனும் பாடலுக்கு விளக்கம் கொடுத்தப்பிறகு, அப்பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் குரு. என்னுடைய முதல் பதம் பாடல் அது. கண்ணனை நேசிக்கும் பெண்ணாக இப்பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும். குரு வாய்மொழியாகக் கூறியதும் நடன அசைவுகளை புரிந்துக் கொண்டு உடனே ஆடத்தொடங்கிவிடுவேன். ஆனால், அன்று குரு பலமுறை ஆடிகாட்டியும் என்னால் பின்பற்ற முடியவில்லை. கண்ணன் என் அருகில் நிற்பதாகவும், அவரைப் பார்த்து வெட்கம் படும்படியும் கூறினார் குரு. பலமுறை பொறுமையுடன் செய்து காட்டியவரின் பொறுமையைச் சோதித்தேன். கோபத்துடன், “ஏம்மா……..செய்ய மாட்டிங்கிறே!” என்றார். “பாவம் செய்ய கூச்சமாக இருக்கிறது மாஸ்டர். எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள்” என பயந்தவாறு கூறினேன். சிறிது நேரம் கோபத்துடன் என்னைப் பார்த்து, “நாட்டியம் ஆட கூச்சமா? உன் கூச்சம், உன் வெட்கம் அனைத்தையும் போக்கிவிட்டு நடனவகுப்புக்கு வா. இப்ப போ!” என்றார். பயம் உடல் முழுதும் பரவியது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் நாட்டிய வகுப்பு தொடர்ந்தது. தலைக்குனிந்து குற்றவாளிப் போல் செய்வதறியாது நின்றேன். என் வாழ்க்கையில் தன் ஆளுமையால் அதிகம் ஈர்த்தவர் என் நாட்டிய குருதான். நாட்டியம் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக எப்படி இருப்பது என்பதனை அவரிடம்தான் அதிகம் கற்றுக் கொண்டேன். அவரின் கோபம் என்னைப் பெரிதும் பாதித்தது. சிறிது நேரத்தில் மற்ற மாணவர்களுக்கு நடன வகுப்பு இனிதே முடிந்தது. என் முகவாட்டத்தைக் கண்ட குரு அவர் அருகே அழைத்தார்.
கோபத்தில் என்னை திட்டுவார் என நினைத்தேன். ஆனால், அன்று குரு என்னிடம் ஒரு கேள்விக் கேட்டார். குரு, “உன் அம்மா இறந்தால், நீ என்ன செய்வாய்” எனக் கேட்டார். அந்த வயதில் அம்மாவின் இறப்பை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மீண்டும் என் கண்கள் என் அம்மாவைத் தேடியது. அப்போது, அம்மா என் பின்னால் நின்றுக்கொண்டிருந்தார். குரு அதே கேள்வியை மீண்டும் கேட்டார். தலைக்குனிந்தவாறு, நான் அழுவேன் என்றேன். குரு, “அப்போது உன்னுடன் நிறைய பேர் இருந்தாலும் அழுவாயா?” எனக் கேட்டார். “ஆமாம்” என்றேன். “அப்போ, நீ எல்லாரும் முன் அழுக கூச்சப்படமாட்டாயா?” எனக் கேட்டார். “இறந்தது என்னைப் பெற்றவளாக இருந்தால் எப்படி அழாமல் இருப்பது, நிறைய பேர் என் முன் இருந்தாலும் அதையெல்லாம் பொருப்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை வரும்” என்றேன். குரு சிரித்துக்கொண்டே, “உன் மனதில் அம்மா என்பவர் ஆழமாகப் பதிந்திருக்கிறார். திடீரென்று அவர் இல்லையென்றதும் நீ எங்கு இருக்கிறாய், யாரெல்லாம் உன்னுடன் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து உன்னையறியாமலேயே கவலையாகி அழ ஆரம்பிப்பாய். இது நீ மட்டுமில்லை உலகில் அனைவரும் அப்படிதான். அதேபோல், நாட்டியம் உன் ஆழ்ந்த மனதில் பதிந்திருந்தால் எங்கு, எப்படி, யார் முன் இவையல்லாம் பொருப்படுத்தாமல் பாடலைக் கேட்டதும் ஆடத் துவங்குவாய். நாட்டியம் ஆடுகையில் உன் கவனம் முழுக்க நாட்டியத்தில்தானே இருக்க வேண்டும். யார் நான் ஆடுவதைப் பார்க்கிறார்கள்? நான் ஆடுவதற்கு கைத்தட்டுகிறார்களா? எனும் சிந்தனை சிதைவு உனக்கெதற்கு? சிந்தனைச் சிதைவு ஏற்பட்டால் மட்டுமே ஒரு நடனமணிக்கு கூச்சம், வெட்கம், பயம் போன்றவை எல்லாம் வரும். ஆடுவதற்கு கூச்சம், வெட்கம், பயம் போன்ற உணர்வுகளுக்கு இடம் கொடுத்தால் உன் ஆழ்ந்த மனதில் நாட்டியம் இல்லையெனப் பொருள்படும். நாட்டியம் உன்னுள் இருக்கிறதா இல்லையா என நீதான் முடிவு செய்ய வேண்டும். நாட்டியம் ஆடுவதை வெட்கமாக நினைப்பதற்கு அது கேவலமான விஷயமில்லை. உலகத்தில் கெட்டது செய்பவனும் தர்மத்தை அழிப்பவனும்தான் வெட்கம் பட வேண்டும். இறைவனின் புகழைப் பாட ஆட எதற்கு வெட்கம்” என்றார் குரு. அன்று கூறியது இன்னமுன் என் மனதில் பதிந்திருக்கிறது. தலையைக் குனிந்தவாறே இருந்தேன்.
“சிறப்பாக நாட்டியம் ஆடும் திறமை உனக்குண்டு. அதை வெட்கம் எனும் பெயரில் கெடுத்துக்கொள்ளதே. ஒவ்வொருவருக்கும் இந்தப் புவுயில் பிறப்பதற்கு காரணங்கள் உண்டு. உன் வேலை நாட்டியத்தை வளர்ப்பதானால், அதை செவ்வன செய்து முடி என்றார். முதலில் நீ ஒரு நர்த்தகி என்பதனை உணர வேண்டும். அடுத்ததாக உன் நாட்டியம் ஆடும் நோக்கத்தை அடைய ஒரே சிந்தனையுடன் இருக்க வேண்டும். இவையனத்தும் இருந்தால் மட்டுமே உன்னால் நாட்டியத்தை தொடர்ந்து படிக்க முடியும் என்றார்”. மெளனத்திற்குப் பிறகு, குருவின் முகத்தைப் பார்த்து மன்னிப்புக் கேட்டேன். சிரித்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டினார். சிறுவயதிலிருந்தே என் மீது குருவிற்கு நிறைய நம்பிக்கை உண்டு. என் குருவின் நம்பிக்கையையும் என் அம்மாவின் கனவையும் நிறைவேற்றும் பெரிய கடமை எனக்கு இருந்த்து. இந்தக் கடமையிலிருந்து நான் இன்னும் தவரவில்லை என அவ்வப்போது நினைத்து என் மனம் மகிழ்ச்சிப் பட்டுக்கொள்ளும்.
நடன வகுப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிகையில் வழிநெடுகிலும் அம்மா, நீ நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும். உன் கூச்சத்தையெல்லாம் மூட்டைக்கட்டி போடு என்பதை கொஞ்சம் கண்டிப்பாகக் கூறினார். முகபாவனையை வளர்த்துக்கொள்ள ஏதேனும் செய்யவேண்டும் என மனதில் புழம்ப ஆரம்பித்தேன்.
என் அம்மாவிற்கு நடனத்துறையின் மீது நிறைய ஈடுபாடு உண்டு. என் முகபாவனையை மேம்படுத்த பல கருப்பு வெள்ளைத்திரப்படங்களை வாங்கி வந்தார். சிவாஜி கணேசம், பத்மினி மற்றும் வைஜேயந்திமாலா போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்க்குமாறு கூறினார். ஞாயிறு தோரும், நாட்டிய சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பதுதான் எங்கள் இருவரின் வேளை. தில்லானா மோகனம்பால், வஞ்ஜிக்கொட்டை வாலிபன், சலங்கை ஒலி, திருவிளையாடல், பக்திப்படங்களைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. தலைப்பகுதில் உள்ள அனைத்து உருப்புகளும் வார்த்தை மற்றும் மொழி இல்லாமல் மிகத் தெளிவாகப் பேசவேண்டும். மொழியும் வார்த்தைகளும் இல்லாமல் மிகத் தெளிவாகப் பேசுவதுதான் முகபாவனை. அதில் நடிகர் சிவாஜி கணேசனை மிஞ்சியவர் யாரும் இல்லை. நாட்டியத்திற்கென பிறந்தவர்கள் வரிசையில் லலிதா, ராகினி, பத்மினி, மற்றும் வைஜெயந்திமாலாவின் நடனங்கள் ஆற்புதமாக இருக்கும். வீடியோவை நிறுத்தி, நாட்டிய அசைவுகளையும் முகபாவங்களையும் உண்ணிப்பாகப் பலமுறை கவனித்து, கண்ணாடி முன் பலமுறை செய்துப் பார்ப்பேன். இவ்வாறு செய்கையில் அம்மா மிகவும் பொறுமையாக என்னுடன் உட்கார்ந்திருப்பார். இப்படியே என்னுடைய ஓய்வு நேரங்கள் கழியும். ஒருநாள், சங்கீதம் படித்தால் முகபாவம் வளரும் என குரு அம்மாவிடம் சொன்னார். உடனே, அம்மா என்னை கர்நாடக சங்கீத வகுப்புக்கும் அனுப்பினார். பழைய திரைப்படங்களும் சங்கீத வகுப்புகளும் என் முகபாவனையை மேம்படுத்தியது. இதனைத் தவிர்த்து, முகபாவங்களைப் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். யாருடன் பேசினாலும் அவர்களின் முகபாவனைகளை உற்று நோக்கியப்படியே பேசுவேன். குறிப்பாக நாட்டியம் பயில்பவர்களிடம்.
நாட்டியம் பயில்பவர்களிடம் சகஜமான பேசினாலே, அவர்கள் முகபாவனைகளுடன்தான் பேசுவார்கள். இதனை பெரும்பாலான நடனமணிகளிடம் கண்டுள்ளேன். அவ்வகையில் ஒருநாள் இந்தியாவிலிருந்து வந்த ஒரு நடன குருவிடம் பேசுகையில் என் முகபாவனை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு ஸ்லோகம் மற்றும் அதன் பொருளையும் சொன்னார்.
கை வழி கண்ணும்
கண் வழி கருத்தும்
கருத்து வழி ரசமும்
கால் வழி தாளமும்
சொல் வழி ராகமும்
சென்று சுவை பிறக்கும்.
இஃது ஓரு சமஸ்கிருத நாட்டிய சுலோகமாகும். நாட்டியம் ஆடுகையில் ஒரு நடமணியின் அசைவுகள் எப்படி அமைந்திருக்க வேண்டும் என இந்த சுலோகம் கூறுகிறது. ஒரு நர்த்தகி ஆடுகையில் அவளுடைய கை வழி அவளின் கண்கள் செல்ல வேண்டும். கை வழி சென்ற கண்கள் கருத்துடன் செல்ல வேண்டும். கருத்தின் வழி ரசம் பிறக்கும். ரசம் என்றால் மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை. நர்த்தகியின் கால்களில் சலங்கைக் கட்டுவதால் அவளுடைய தாளம் பாடலுக்கேற்ப தவறாமல் இருக்க வேண்டும். ஒரு பாடலின் சொல் வழி ராகங்கள் அமைந்தால் பாடல் சிறப்பாக இருக்கும். இவையனைத்து இருந்தால் மட்டுமே, ஒரு நர்த்தகியின் மூலம் சிறப்பான நாட்டியம் பிறக்கும்.
எந்தவித கலை படைப்பாக இருந்தாலும், அதன் குறிக்கோள்/நோக்கம் ரச (மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை) உற்பத்தி செய்வதே ஆகும். ஒரு சிறந்த ரசனை மட்டுமே ஒரு கலைஞனை தெம்பூட்டும். ஒரு கலைப்பொருளைப் படைப்பவருக்கும், கலையை ரசிப்பவருக்கும் ரசமே குறிக்கோளாக விளங்குகிறது. பண்டையகாலத்தில் பல வல்லுனர்கள் ரசனையைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் பரதமுனியும் ஆவார். பரதமுனிதான் பரத சஸ்திரத்தை இயற்றியவர். அவர் இயற்றிய நாட்டிய சாஸ்திர நூலின் கருப்பொருளே நாட்டியத்தின் மூலம் ரசம் எவ்வாறு மிளிர்கிறது என்பது ஆகும்.
ரசம் உண்டாவதற்கு ஆதாரம் பாவம். பாவம் என்பது மனதில் எழும் உணர்ச்சி. இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலை அபிநயம் என்பர். அபிநயம் என்பது ஸமஸ்கிருதச் சொல். அபி என்றால் நோக்கிடம். நய என்றால் எடுத்துச் செல்வது. ஒருவரை/ஒன்றை நோக்கி ஒருவரிடத்தே எடுத்துச் செல்லும்போது பாவத்தைத் தூண்டுவது அபிநயம் ஆகும். அபிநயத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள், கருத்துகள், ரசிகர் மனத்தைத் தொட்டு, அவர்கள் உள்ளங்களிலும் அதே உணர்ச்சிகள் உணர்வுகளாக எழும் பொழுது, அந்த ரசிகர்கள் அதே உணர்ச்சிகளைச் சுவைக்கின்றனர். அப்போது ரசிகர் மனதில் உண்டாகும் சுவைதான் ரசம்.
ரசத்தைப்பற்றி பேசுகையில், சட்டென என் அரங்கேற்ற நிகழ்வுதான் நினைவிற்கு வருகிறது. பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பதம் பாடல் ஒரு முக்கிய அம்சமாகும். அனைவரும் எதிர்ப்பார்க்கும் பாடலும் கூட. எனது பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது, குருவின் உழைப்பால் மகாபாரதத்தில் வரும் பஞ்சாலி சபதத்தையொட்டி ஆடினேன். பஞ்சபாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று போனதிலிருந்து துரியோதனன் பஞ்சாலியின் புடவையை உறியும் வரை நான் அபிநயம் பிடித்தேன். சுமார் 25 நிமிட பாடலில் நான் ஒருத்தியே பஞ்சாலியாகவும் பஞ்சபாண்டவர்களாகவும் துரியோதனாகவும் ஆடவேண்டியிருந்தது. இம்மாதிரியான பாடலை ஆடுவதற்கு நிறைய கற்பனைத்திறன் இருக்க வேண்டும். கடவுள் கிருபையால் எனக்குக் கிடைத்த திறமையான குரு மூலம் என்னால் அப்பாடலுக்கு ஆடமுடிந்தது. அசுர ஆணாகவும் பெண்மை நிறைந்த பஞ்சாலியாகவும் முகபாவனை மற்றும் உடலசைவுகளை மாற்ற வேண்டியிருந்தது. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் அசுர ஆணைப்போல் அப்பாடலின் அபிநயம் பிடித்தேன். அந்தப் பாடலுக்குச் சிறப்பாக ஆடினேன் என பலரும் பாராட்டினர். 5 வருடங்கள் ஆகியும், இன்னமும் எனது அரங்கேற்றத்திற்கு வந்தவர்கள் இப்பாடலைப் பற்றி பேசுவதுண்டு. நான் துரியோதனாக இருந்து பஞ்சாலியின் புடவையை உறியும் போது, பார்வையாளர்கள் முக்கியமான பெண்கள் தங்கள் கைகளால் அவர்கள் புடவை முந்தானியைப் பிடித்துக் கொண்டார்கள் என பலரும் கூறினர். அச்சபையில் பஞ்சாலி பட்ட அவமானம், கஷ்டங்களை அப்பாடலின் மூலம் கண்ட பலரும் கண் கலங்கினர் என தெரியவந்தது. ஒரு நர்த்தகி ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தன்னையும் தன்னைச்சுற்றி இருப்பவர்களை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தால் மட்டுமே நாட்டியத்தின் மூலம் பார்வையாளர்களையும் அப்பாடலின் கருத்தோடு உணர வைக்க முடியும்.
என்னால் உணர வைக்க முடிந்தது. குருவின் முன் அன்று நான் குருதட்சனையாக வைத்த என் வெட்கத்தின் பலனுக்கான அங்கீகாரம் அது என மட்டும் மனம் கூறியது