09 November 2011

அப்சரா

அண்மையில் நான் பயணம் செய்த வரலாறு மற்றும் கலை கலாச்சாரத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற 'கம்போடியா' நாடு என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய நாட்டிய கலையையும் அப்பயணம் மேம்படுத்தியது எனலாம். பொதுவாகச் சிற்ப கலை, பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலாச்சார உடைகள் என்னை பெரிதும் கவரும்; அதில் எனக்கு அதிக ஆர்வமும் உண்டு. ஆகவே, நான் எங்குச் சென்றாலும் இதனையொட்டியத் தகவல்களின் மீதுதான் அதிக ஆர்வம் செலுத்துவேன். 'கம்போடியா' பயணமும் அப்படிதான். 'கம்போடியா' வுக்குச் செல்லும் முன்பே ஓரளவு அவ்விடத்தின் வரலாற்று இடங்களையும் கதைகளையும் இணையத்தில் படித்துக் கொண்டேன். விமானத்தில் என் அத்தை மகளுடன் நான் படிதத்தைப் பகிர்ந்து கொண்டேன். என் அத்தை மகள் நிறைய வெளிநாடுகளுக்குப் போன அனுபவம் உள்ளவள். ஆகையால் ஓரளவு 'கம்போடியா' எப்படி இருக்கும் என்பதனை விவரித்தார்.


'கம்போடியா' முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தென்கிழக்காசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றன. இந்நாட்டின் தலைநகர் 'புனோம் பென்'. இந்நாட்டுக் குடிமக்களைக் 'கம்போடியர்' மற்றும் 'கிமிர்' எனவும் அழைக்கின்றனர். பெரும்பலான கம்போடியர் தேரவாத பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 'தேரவாதம்' பெளத்தத்தில் மிகப் பழமையான பிரிவு. இலங்கை மக்களில் 70% இச்சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாகத் தேரவாதத்தைப் பின்பற்றுகின்றன.

நிறைய தேடலுடன் அந்நாட்டின் விமானநிலையத்தில் காலை மணி 7.30க்கு அடைந்தேன். விமானநிலையம் அமைதியான சூழ்நிலையில் இருந்தது. 'கம்போடியா' அரசனான ஜெயா வர்மனின் சிலை என்னை வரவேற்றது. மிகவும் கம்பீரமாக வெள்ளை யானை மீது சவாரி செய்யும் ஜெயவர்மனின் சிலை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மிக அவசரமாக அச்சிலைக்கருகில் படம் பிடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.




இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த தங்கும் விடுதியை நோக்கி என்னுடைய பயணம் ஆரம்பித்தது. நான் எதிர்ப்பார்த்த மாதிரி 'கம்போடியா' இல்லை. எங்கும் அமைதி. மட்சாலையில் பள்ளி மாணவர்கள் காலணி இல்லாமலிருப்பதைப் பார்த்தபோது வறுமையை உணர முடிந்தது. தங்கும் விடுதியில் இருந்த பயண முகவரைச் சந்தித்தேன். அவர் ஒரு கம்போடியர். இவரின் தாய்மொழி கிமிர் . அதுவே இந்நாட்டின் அரசு அலுவல் மொழியாகும். பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகப் பயன்பாட்டில் உள்ளது. பிரெஞ்சு மொழி சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றல் கற்பித்தல் மொழியாகவும் பயன்படுகிறது. தற்போது இளைய தலைமுறையினர், ஆங்கில மொழியினைப் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அவர் ஓரளவு ஆங்கிலம் பேசினார். அவர் பேச்சில் நிறைய ஆங்கில இலக்கணப்பிழைகள் இருந்தாலும் என்னால் அவரின் மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வப்போது என் அத்தை மகளுக்கும் என் தோழிக்கும் அவர் கூறியதில் சிலவற்றை மொழிப்பெயர்ப்புச் செய்துக்கொண்டே என் 'கம்போடியா' பயணத்தைத் தொடர்ந்தேன்.

பயணம் தொடங்கும் முன்பே, என் சுற்றுலாவின் அவசியத்தையும் பற்றி பயண முகவரிடம் சொன்னேன். கம்போடியாவில் உலகில் மிகப் பெரிய இந்து ஆலயமான 'அங்கூர் வாட்டையும்' 1,000 சிவலிங்கங்கள் இருக்கும் நீர்விழுச்சியையும் பார்ப்பதுதான் எனது முதன்மையான நோக்கமாக இருந்தது. 1,000 சிவலிங்கங்கள் இருக்கும் நீர்விழுச்சி சுற்றுலா பட்டியலில் இல்லை என்றும் அந்த நீர்விழுச்சிக்கு அரைநாள் பயணிக்க வேண்டும் என்றார் பயண முகவர். நான் கூறிய இவ்விரு இடங்களும் இந்தியர்கள் வாழ்ந்த தடையங்கள் உள்ள இடங்களாகும். அவர் ஓரளவு என் பயணத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டார். பயணமுகவர் என் விருப்பத்திற்கேற்ப சுற்றிக்காட்டினார்.

இந்தியா தஞ்சை பெரிய கோயிலுக்குப் பிறகு என்னைப் பெரிதும் கவர்ந்த இந்து ஆலயம் “அங்கூர் வாட்”. “அங்கூர் வாட்” என்பது, கம்போடியாவில் ஒர் இந்துக் கோயில் தொகுதியாகும். இரண்டாம் சூரியவர்மன்-கம்போடிய மன்னன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. “வாட்” என்பது கிமர் மொழியில் கோயில் என அர்த்தப்படுகிறது.


அங்கூர் வாட்டைச் சுற்றி ஓர் அகழி உள்ளது. அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். அங்கூர் வாட் மூன்று மண்டபங்களும் ஐந்து கோயில்களையும் சூழப்பட்டுள்ளது. அங்கூர் வாட்டில் சிற்ப கலைகள் மிக அற்புதமாக இருந்தது. முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. சுவர்கள் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களில் நடனப்பெண்கள் விலங்குகளின் மீது அமர்ந்து நடனமாடும் சிற்பங்களும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபச் சுவர்களிலும் நடனமாடும் பெண்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. புடைப்புச் சிற்பம் என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும். இவ்வகை சிற்பங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஆதிகால மனிதனின் ஆற்றலை எண்ணி வியந்தேன். இதனைத்தவிர்த்து, பெரும்பலான சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளி பூங்காக்கள் உள்ளன. கம்போடியாவைக் குறிக்கும் சின்னமாக விளங்கும் இக்கோவிலின் படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த “அங்கூர் வாட்”டைக் காலையில் 8 மணிக்குத் தொடங்கி மதியம் வரைக்கும் என்னால் சுற்றிப்பார்த்து தீர்க்க முடியவில்லை. என் பயண முகவர் அங்கூர் வாட்டின் வரலாற்றையும் மிகவும் தெளிவாக விளக்கினார். என்னுடைய அதிகமான கேள்விகளுக்குப் பதில் கூறி களைத்துப் போன பயண முகவர் ஓர் இடத்தில் சற்று நேரம் ஓய்வெடுக்க உட்கார்ந்தார். நான் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். சட்டென்று ஒரு வடிவமான பெண் சிலை என் கண்ணில் பட்டது. என்னையறியாமல் நீண்ட நேரம் அச்சிலையைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் பயண முகவர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடன் நடந்து செல்லும் போதும் அச்சிலையின் ஞாபகம் வந்துக் கொண்டே இருந்தது. வேறு எங்காவது அச்சிலையை மீண்டும் காண முடியுமா என தேடிக்கொண்டே போனேன். மதிய உணவுக்குப் பிறகு வேறொரு இந்து ஆலயத்திற்குச் செல்வதாகத் திட்டம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு பயணம் தொடர்ந்தது.



 'அங்கூர் தோம்' எனும் மற்றொரு இந்து ஆலயத்திற்குச் சென்றோம். அங்கூர் தோம் ஐந்தாவது ஜெயவர்மன் சாம்ராஜ்யத்தின் பொது கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் கோபுரம் பிரம்மாவின் முகம் போல மூன்று பக்கமும் முகங்களால் சுழப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. அவ்வற்புதத்தை ரசித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அச்சிலை என் கண்ணில் தேன்பட்டது. 'அங்கூர் வாட்'டில் பார்த்த அதே சிலை. அந்தச் சிலையின் வடிவம், ஒரு நாட்டிய பெண் போல் இருந்தது. உடனே, என் புகைப்படக்கருவியில் படம் எடுத்துக்கொண்டேன். என் பயண முகவரை என்னுடன் அழைத்து, இச்சிலையைப் பற்றி கூறுமாரு கேட்டேன். அவர் 'அப்சரா' என்றார். “What its Apsara?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். கம்போடியாவின் கலாச்சாரத்திற்கேற்ப அப்சராவின் உடையும் ஆபரணமும் மாறியிருந்தது. எனவே, என்னால் அஃது அப்சரா என்பதனைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. என்னை அந்தச் சிலை ஏன் ஈர்த்தது என்று அப்பொழுதுதான் புரிந்தது.



நாட்டியம் பயில்வர்களுக்கு அப்சராக்களைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அடுத்த நொடியே, அவர் ரம்பை, மேனகா, ஊர்வசி என்றும் கூறினார். என்னுடைய இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது. என் உடலில் எல்லா உருப்புகளும் வேகமாக செயல்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து, அவர் அப்சராக்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார். அப்சராக்களைப் பற்றிய எனது புரிதலை அவர் கூறும் போது சரி செய்துக் கொண்டேன். அப்சராக்களைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றையும் பரதநாட்டியத்தில் அப்சராக்களின் பங்கையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து மற்றும் பெளத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். ரிக் வேதத்தில், இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர்கள். சிறப்பாக நடனமாட வல்லவர்களான இவர்கள் கடவுளரின் சபையில் தம் கணவர்களின் இசைக்கேற்ப நடனமாடுவர்கள். ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை ஆகியோர் நன்கு அறியப்பட்ட அப்சரசுகள். அப்சராகள் லவுகீக (பொருளுலக), மற்றும் தெய்வீக (கடவுள் தன்மையுடைய) அப்சரா என இருவகையாகக் குறிக்கப்படுகின்றனர். மகாபரத்தில் மற்றும் இராமயணத்தில் அப்சராக்களின் பங்கு அளப்பெரியது.

நான் ஒரு நர்த்தகி என்பதை அறிந்து பலமுறை மகிழ்ச்சி பட்டுக் கொண்டார் என் பயணமுகவர். என்னைத் தொடர்ந்து நாட்டியம் பயிலும் படியும், ஒருநாள் 'கம்போடியா கல்சரல் ஷோ' (Cambodian cultural show)” வில் நாட்டியம் ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறினார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முன், நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறியவர் என்னுடன் அதிக பேசத் தொடங்கினார். அவர் பேச்சில் நிறைய மரியாதையும் பணிவும் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். எனது பெயரையே நான் ஒரு நர்த்தகி எனத் தெரிந்த பிறகுதான் கேட்டார். அவர் பேச்சில் மரியாதை சேர்ந்திருந்தது. அந்த மரியாதை உனக்கல்ல உன்னுள் இருக்கும் நாட்டியத்திற்கு என என் மனம் கூறிக்கொண்டே இருந்தது. அந்த வேளையில் என் நாட்டிய குருவையும் என் தாயாரையும் மனதில் வணங்கியப்படி எனதறைக்குத் திரும்பினேன். மனதில் ஒருவகையான சந்தோஷத்துடன் எனதறைக்குப் பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் குளிக்கத்திட்டமிட்டேன்.

திடீரென்று, வரவேற்பறையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளதாக கம்போடிய பையன் எனதறைக் கதவைத் தட்டினான். யார் கம்போடியாவில் என்னை அழைப்பது என நிறைய கேள்விகளுடன் தொலைப்பேசியில் “Hello” என்றேன். தொலைபேசியில் என் பயணமுகவர் பேசினார். அவர் பேச்சில் விறுவிறுப்பு இருந்தது. இருமுறை பொருமையாகக் கேட்டபிறகு, அவர் கூற வந்த தகவல் எனக்குப் புரிந்தது. இன்றிரவு ஓர் உணவகத்தில் கம்போடியாவின் பாரம்பரிய நடனம் நடைப்பெறுவதாகவும், எனக்கு விருப்பம் இருந்தால் போகலாம் என்றும் கூறினார். கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் என் அத்தை மகள் மற்றும் என் தோழியுடன் உடனே கிளம்பினேன்.

அந்த உணவகம் பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. பல்லின நாட்டு மக்கள் அந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர். பெரும்பான்மையோர் ஆங்கிலேயர்களாக இருந்தனர். அங்கு வந்திருந்த எல்லோரும் நாட்டியத்துறையில் சம்பந்தப்பட்டவர்களைப் போல் இருந்தார்கள். பலவகையான உணவுகள் இருந்தும் என்னால் அதை ருசிக்கமுடியவில்லை. என்னுடைய முழு கவனமும் நாட்டிய நிகழ்ச்சியின் மேல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் முன் கம்போடியன் மொழியில் நடனத்தையொட்டி விளக்கம் கொடுத்தனர். என் பயணமுகவர் அதனை மொழி பெயர்த்து என்னிடம் கூறினார். முதல் நடனம், இராமயணத்தையொட்டி இருந்தது. இராவணன் சீதையை இலங்கைக்குத் தூக்கிச் செல்லும் காட்சி அது. மிகவும் அற்புதமான இருந்தது. நான் பார்த்த அப்சரசு சிலையைப் போலவே. நாட்டிய நுணுக்கங்களைப் பற்றி தெரிந்திருந்ததால் அந்நடனம் மிக எளிதாகப் புரிந்தது.


கம்போடியன் நடனம் அரசவையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்நடனம் மிகவும் தொன்மைவாய்ந்தது. கம்போடியன் நடனத்தின் உடை மற்றும் பாடல் இந்நாட்டியத்திற்கு மேலும் சிறப்பூட்டியது. இருபதாம் நூற்றாண்டில் இந்நடனம் பொது மக்களிடையே பரவியது. இந்நடனத்தை விடுமுறையின் பொது, பொது இடங்களில், சுற்றுப்பயணிகளின் முன் ஆடப்படுகின்றன. கம்போடியாவின் பரம்பரிய நடனங்கள் இருவகைப்படும். அவை 'Wishing Dance' (Robam Chun Por) and 'Apsara Dance' (Robam Tep Apsara) ஆகும். “Robam Tep Apsara” எனப்படும் நடனம் தெய்வாம்சங்கள் நிரம்பிய நடனமாகக் கருதப்படுகிறது. கம்போடியன் மக்கள் இந்நடனத்தை மிகவும் உயர்வான நடனமாகக் கருதுகின்றனர். இந்த வகை நடனம் கம்போடியா இராணியால் அரசவையில் ஆடப்பட்டது என்று பழங்காலத்து கம்போடிய இதிகாசங்கள் கூறுகின்றன. இவ்வகை நடனத்தை ஆடும் நடனமணிகளின் உடையும் அவர்கள் உடலும் மிகவும் வசீகரமாக உள்ளது. பெரும்பாலான நடனங்கள் இராமயணத்தையொட்டி இருக்கின்றன.



கம்போடியன் நடனத்திற்கும் இசைக்கும் நம் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. கம்போடியன் நடனங்கள் இதிகாசக் கதைகளையொட்டி அமைந்திருக்கின்றன முக்கியமாக இராமயணம். நம் பரதமும் பழங்காலத்து இதிகாசக்கதைகளையொட்டிதான் பல்லாயிர நடனப்பாடல்களும் கீர்த்தனைகளும் பிறந்தன. கர்நாடக சங்கீதத்திலுள்ள பாடல்களும் இதனையொட்டிதான் இருக்கின்றன. இராமயணம் மற்றும் மகாபாரதம் பரதநாட்டியத்திலும் கர்நாடக சங்கீதத்திலும் மிக முக்கியமான காவியமாகும். இவ்விரு காவியத்தைப் போற்றிப் பாடாத நாட்டிய மற்றும் சங்கீத நிகழ்ச்சிகளே இல்லை. கம்போடிய நடனத்திற்கும் பரதத்திற்கும் மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டியத்தின் கரு என்னவோ ஒன்றுதான். கம்போடியர்களும் நாட்டியத்தின் வழி தன்னுடைய கடவுகளைப் போற்றி ஆடுகின்றனர். ஆகையால்தான் கம்போடியர்கள் கடவுளுக்கு அடுத்ததாக நடனமாடுபவர்களை உயர்வாகக் கருதுகின்றனர். நம் இந்தியர்களிடையும் இந்த உணர்வை அதிகமாகப் பார்க்கிறேன். சட்டென்று, என் நடன குரு இரா. சந்திரமோகன் நாட்டிய வகுப்பின் போது சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிற்பி தன் கைகளை கடவுளின் சிலைகளை வடிப்பதன் மூலம் இறைவனுக்கு அற்பணிக்கின்றான். ஒரு புரோகிதர் தன்னுடைய குரலை இறைவனின் பாடல்களையும் மந்திரங்களையும் பராயணம் செய்து இறைவனுக்கு அற்பணிக்கின்றான். ஆனால் ஒரு நடனமணி தன்னுடைய முழு உடலையும் சிந்தனையையும் உள்பட இறைவனுக்காக நாட்டியத்தின் மூலம் அற்பணிக்கின்றாள். ஆகவேதான், நாடனமாடுபவர்களை நம் சமுதாயம் உயர்வான பார்க்கிறது. இறைவனிடன் சரணடைய நிறைய வழிகள் உள்ளன. சிலர் சேவை மற்றும் தர்மம் செய்து இறையருள் பெருவர், சிலர் பூஜை புனஸ்காரங்களை செய்வர், சிலர் தியானத்தின் மூலம் இறையருள் பெறுவர். இந்த வரிசையில், ஆடல் பாடல் மூலம் இறைவனைச் சரணடைவது ஒருவகையாகும். இந்தக் கருத்தைக் கம்போடிய மக்களிடமும் கண்டேன்.

நிகழ்ச்சி முடிந்து, என் பயணமுகவர் என்னை நடனமணிகளிடன் அழைத்துச் சென்று அறிமுகம் படுத்தினார். கம்போடிய நடனமணிகளிடம் பேசுகையில் நாட்டியத்தின் மூலம் தங்களை இறைவனுக்குத் சமர்ப்பிப்பதாகச் சொன்னார்கள். பெரும்பாலான நடனமணிகள் திருமணம் செய்யாமல் முழுமையாகத் தங்களை நடனத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்த அதிகமான நடனமணிகளிடன் லவுகீகத்தில் (பொருளுலகத்தில்) பற்றற்றவர்களாக உள்ளவர்கள். நடனமணிகள் பற்றற்ற தன்மையுடன் இருப்பதைக் கம்போடியாவிலும் கண்டேன். கம்போடியாவின் நடனமணிகளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன். அவர்கள் நம் பரதத்தை இணையத்தில் பார்த்ததுண்டு என்றார்கள். பணப்பையில் இருந்த எனது நாட்டிய புகைப்படத்தைக் காட்டி, அவர்களிடம் பரத்தைப் பற்றி சிறிது நேரம் உரையாடினேன். நிறைய கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்குப் பதில் அளித்தேன் என நினைகிறேன்.

உலகத்தில் ஒவ்வொரு இந்து ஆலயமும் நாட்டிய சாஸ்திரத்திலுள்ள கர்ணங்களைதான் (நடன அசைவுகள்) அடிப்படையாகக் கொண்டுள்ளன. கம்போடியவிலுள்ள இந்து ஆலயங்களிலும் இதனைதான் அதிகம் கண்டேன். இதிகாசக்கதைகளில் வரும் முதன்மையாக கதாபாத்திரங்களின் சிலைகள், அப்சராக்கள், மிருகங்கள், சில முக்கிய சம்பவங்களின் காட்சிகள் போன்ற கம்போடிய ஆலயத்திலுள்ள சிற்பக் கலைகளில் காண முடிகிறது. இத்தகைய ஒற்றுமைகள் இந்து மதத்தையும் ஒரே கரு/ கருத்துடைய இதிகாசக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

அன்றிரவு முழுவதும் என் சிந்தனை கம்போடியன் நடனத்தையொட்டியே இருந்தது. மறுநாள், என் பயணமுகவர் எனக்கு ஓர் அப்சரா சிலையையும் வரைப்படம் ஒன்றினையும் பரிசளித்தார். அவரிடமிருந்து நான் அப்பரிசை எதிர்ப்பார்க்கவில்லை. எனக்கு யாராவது பரிசளித்தால் உடனே என் பங்குக்கு ஏதேனும் வாங்கிக்கொடுத்து கடனைத் தீர்த்துக்கொள்வேன். அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்ட பொது, என் நாட்டிய புகைப்படத்தைக் கேட்டார். என் முகநூலிலிருந்து என் படத்தை “save” செய்துக்கொள்ள அனுமதி கேட்டார். சற்றும் யோசிக்காமல் “okay, sure” என்றேன். நான் எங்குச் சென்றாலும் அந்த இடத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொம்மை அல்லது சிலைகளை வாங்குவது வழக்கம். என்னுடைய சேமிப்பில் நாட்டிய சம்பந்தப்பட்ட அப்சராக்களின் சிலை சேர்ந்திருப்பது என் மனதை நெகிழ வைத்தது.

உலகெங்கும் நாட்டியம் பலவகையாகப் பரவியிருப்பதை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டின் மொழி, இறை நம்பிக்கை, கலாச்சாரம், அரசமைப்பு மற்றும் சூழலுக்கேற்ப மாறுப்பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தும் பரத சஸ்திரத்தையொட்டி இருக்கின்றன என்று கூற பெருமைப்படுகிறேன். என்னுடைய கம்போடிய பயணம் என் நாட்டியத்துறையின் மீதான ஆர்வத்தை வளர்த்தோடு இல்லாமல் என் சமய உணர்வையும் வலுப்படுத்தியது. பரதத்திற்கும் கம்போடியன் நடனத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.

http://www.vallinam.com.my/issue35/essay1.html